Dec 31, 2009

திருச்சிற்றம்பலம்

மணவூர்
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருநந்தீஸ்வரர் 


"ஆழ்கதீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமுந் துயர் தீர்க்கவே"

குரும்பர்கள் தொண்டை மண்டலத்தை 24 கோட்டங்களாக பிரித்து ஆட்சி செய்து வந்தனர். அவற்றில் 4 வது மண்டலமாக மணவூர் விளங்கியுள்ளது. மணவூர் என்ற ஊரின் பெயர் இங்கிருக்கும் திருநந்தீஸ்வரர், கந்தசாமி மற்றும் பிள்ளையார் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் மணயிர், மணவிர், மணவூர், மணவில் என்று பலவாறாக பொறிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம்-சென்னை மார்கத்தில் 54 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள கோவில்கள் மேலும் அழகுப்படுத்துகின்றன. சரித்திரப்புகழ் வாய்ந்த இக்கிராமத்தில் வாழும் நன்மக்கள் புரதானமாக விளங்கிய 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆனந்தவல்லி உடனுறை திருநந்தீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி செய்திட முனைந்துள்ளனர்.

கோவில் சிறப்புகள்

திருநந்தீஸ்வரர் மூலவர், கோவில் வடபாகத்தில் ஆனந்தவல்லியம்மை சந்நிதியும், வெளிச்சுற்றுப்பிரகாரத்தில் கணபதி, சுப்ரமணியர் சந்நிதிகளும், கிழக்குப்பகுதியில் கொடி மரம் மற்றும் பலி பீடங்களும் உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், கணபதி, பிரம்மா, துர்க்கையும்,  க்ஷேத்ர பாலகராக பைரவரும், சோழர்களுக்கே உரித்தான சிற்ப வல்லமையுடன் விளங்குகின்றன. ஸ்தல விருட்சம் வில்வம்.

சிவபெருமான் அகத்தியருக்கு மணக்கோலத்துடன் காட்சி அளித்த ஸ்தலம் ஆதலால், திருமணவூர் என அழைக்கப்பெற்று, இந்நாளில் மணவூர் என்று விளங்குகின்றது. நந்தி பகவான் சிவபெருமானை பூஜித்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். இக்காரணத்தால் இறைவர் "திருநந்தீஸ்வரர்" என்று அழைக்கப்படுகின்றார். இக்கோவில் கருவறை தென் சுவற்றில் உள்ள சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டில் இறைவன் பெயர் "மணவில் உடையார் சோமநாத தேவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இத்திருத்தலத்தில் நடராஜர் சிறப்பு குறிப்பிடத்தக்கது. பரிவார மூர்த்தியான நடராஜர் சிரித்த முகத்துடன் அனந்த தாண்டவம் ஆடும் கோலம் சிறப்புடையது. சிவ பெருமானின் ஐந்து சபைகளான இரத்தின சபை(திருவாலங்காடு), கனக சபை(சிதம்பரம்), ரசித்த சபை(மதுரை), தாமிர சபை (திருநெல்வேலி), சித்திர சபை (குற்றாலம்) உள்ள சிறப்புகளுக்கு இணையாக மணவூர் விளங்குகின்றது. இங்குள்ள நடராஜர் சபை "ஞான சபை" ஆகும்.


"ஆடியது ஆலங்காட்டில், அமர்ந்தது திருவூறலில், மணந்தது மணவூரில்" என்றொரு பழமொழி உண்டு.

ஆகமத்தில் கர்ஷனாதி, பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி, உத்சவாந்தம், உத்சவாதி, பிரயச்சிதாந்தம் என்னும் நான்கு வகையில் எந்தெந்த ஆலயங்கள் எங்கெங்கு இருக்க வேண்டும் என்ற முறைப்படி கிராமத்தில் ஈசான்யத்தில் சிவாலயமும், நிருதி மூலையில் விஷ்ணு ஆலயமும், இடையில் கணபதி, கந்தசாமி, அம்பிகை முதலிய ஏனைய ஆலயங்களும் முறைப்படி எக்காலத்திலோ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயங்களுக்கிடயே, நந்தி பெருமான் உண்டாக்கி, அதில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்ற சிறு தீர்த்தம், அழகமைந்த படித்துரைகளோடு விளங்குகின்றது. 


இத்தீர்த்தத்தில், சிவபெருமானின் ஜடா பாரத்தில் உள்ள கங்கை பாதாள மார்கமாக வருவதாக ஐதீகம். ஆனால் காலக்கோளாறினால் வற்றிவிட்டது.

ஒரு செவி வழி செய்தியாக, கிராமத்தின் பெரியவர்கள் கூறியது, இத்திருக்கோவிலின் கதவுகள் திறக்கும்பொது அதிலுள்ள மணிகளின் ஓசை, சிதம்பரத்தில் கேட்கும் என்றும், அதன் பின்னரே சிதம்பரத்தில் நடை சாத்தப்படும் வழக்கமும் இருந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.



சிறப்புகள்
  • இங்குள்ள விநாயகர் சந்நிதி பிரமிக்கத்தக்கது. இவரை வணங்கி வழிபட்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கிவிடுகின்றது.
  • இங்கு வீற்றிருக்கும் இறைவி ஆனந்தவல்லியம்மையை வழிபடுபவர் கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதாக நம்பிக்கை.
  • சிவ பெருமான் அகத்தியருக்கு திருமண காட்சியளித்த ஸ்தலம் ஆதலால் திருமண தடை நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகின்றது. 
  • கண்ணப்ப நாயனார் இத்தல இறைவனை தரிசித்துள்ளார். ஆதாரமாக, உற்சவ மூர்த்திகளில் வில்லேந்திய கண்ணப்ப நாயனார் உருவம் இங்கு இருப்பது சிறப்பு.
கோவில் விழாக்கள்
  • மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் திருக்குளத்தில் நீராடி திருவெம்பாவை பாடி 10 நாட்கள் நடக்கும் உற்சவம் வெகு விமரிசையாகும்.
  • வைகாசி விசாகத்தன்று 11 நாள் உற்சவம் நடைபெறுகின்றது.
கோவிலின் தற்போதைய நிலைமை
இத்திருகோவில் சிதலமடைந்திருந்தது. தற்போது அதை புனரமைக்கும் பொருட்டு சுமார் 42 ,00 ,000  ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு 50 % பணிகள் நிறைவேறிவிட்டன. ராஜகோபுரம், கொடி மரம் மற்றும் சில பணிகள் நிலுவையில்  உள்ளது. இவ்வேலைகளை செவ்வனே நிறைவேற்றி  விரைவில் குடமுழுக்கு நடத்திட திருவருள் கூட்டியுள்ளது. கோவில் புகைப்படங்கள் இங்கே .


சிவாலய திருப்பணியின் பயன்கள்/பெருமைகள் 
ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:
பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று


"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"


சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே"  


கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்திட அருளாளப்பெருமக்கள் மனமுவந்து பொருளாகவோ/பணமாகவோ நன்கொடை அளித்து இறையருட்செல்வம் பெற்று இன்புற வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

ராஜகோபுரம் - 18 00 000  
ராஜகோபுர மண்டபம் - 2 00 000
பரிவார மூர்த்தி வாகனங்கள் பழுது பார்த்தல் - 1 50 000
ஆருத்ரா மண்டபம் -1 00 000
அம்பாள் கோவில் விமானம் - 50 000
கொடி மரம், கொடி மரம் மேடை - 4 25 000
வர்ணப்பூச்சு - 1 50 000  
நந்தி மண்டபம் - 10000
குடமுழுக்கு செலவு மற்றும் சம்பாவனை - 2 50 000  
மின்சார வேலைகள் - 55 000

தங்களால் இயன்ற நன்கொடையினை, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: கோவிலில் மணவூர் கிராம நிர்வாகிகள் முகாமிட்டுள்ளனர். அவர்களிடம் நேரடியாகவும் கொடுத்து உதவுமாறு வேண்டுகிறோம்.

இங்கனம்
கிராம பொது மக்கள்

No comments:

Post a Comment